கந்தர் சஷ்டி கவசம்
Kanda Sashti Kavasam (கந்தர் சஷ்டி கவசம்): Tamil text and meaning · தேவராய சுவாமிகள் (Devaraya Swamigal)
- அமரர் இடர்தீர அமரம் புரிந்த
- குமரன் அடி நெஞ்சே குறி
- துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
- பதிப்போர்க்குக் செல்வம் பலித்து கதித்து ஓங்கும்
- நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
- சஷ்டி கவசந் தனை
- சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
- சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்;
- பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
- கீதம் பாட கிண்கிணி யாட
- மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
- கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
- வரவர வேலாயுதனார் வருக
- வருக வருக மயிலோன் வருக
- இந்திரன் முதலா எண்டிசை போற்ற
- மந்திரவடிவேல் வருக வருக
- வாசவன் மருகா வருக வருக
- நேசக் குறமகள் நினைவோன் வருக !
- ஆறுமுகம் படைத்த ஐயா வருக
- நீறிடும் வேலவன் நித்தம் வருக
- சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
- சரஹணபவனார் சடுதியில் வருக !
- ரஹண பவச ரரரர ரரர
- ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
- விணபவ சரஹ வீரா நமோநம
- நிபவ சரஹண நிறநிற நிறென
- வசர ஹணப வருக வருக!
- அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
- என்னை ஆளும் இளையோன் கையில்
- பன்னிரண்டாயும் பாசாங் குசமும் !
- பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
- விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
- ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
- உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும்
- கிலியுங் செளவும் கிளரொளியையும்
- நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
- சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
- குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
- ஆறு முகமும் அணிமுடி ஆறும்
- நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
- பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
- நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
- ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
- ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
- பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
- நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
- முப்புரி நூலும் முத்தணி மார்பும்
- செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
- துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
- நவரத்னம் பதித்த நற் சீராவும்
- இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
- திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
- செககண செககண செககண செகண
- மொகமொக மொகமொக மொகமொக மொகென
- நகநக நகநக நகநக நகென
- டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
- ரரரர ரரரர ரரரர ரரர
- ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
- டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
- டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
- விந்து விந்து மயிலோன் விந்து
- முந்து முந்து முருகவேள் முந்து
- என்றனை யாளும் ஏரகச் செல்வ !
- மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
- லாலா லாலா லாலா வேசமும்
- லீலா லீலா லீலாவிநோத னென்று
- உன்றிருவடியை உறுதியென் றெண்ணும்
- என்றலை வைத்துன் இணையடி காக்க
- என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
- பன்னிரு விழியால் பாலனைக் காக்க
- அடியேன் வதனம் அழகுவேல் காக்க
- பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
- கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க
- விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
- நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
- பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
- முப்பத் திருபல் முனைவேல் காக்க
- செப்பிய நாவை செவ்வேல் காக்க
- கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
- என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
- மார்பை இரத்தின வடிவேல் காக்க
- சேரிள முலைமார் திருவேல் காக்க
- வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
- பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
- அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
- பழுபதி னாறும் பருவேல் காக்க
- வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
- சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
- நாணாங்கயிற்றை நல்வேல் காக்க
- ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க
- பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
- வட்டக் குதத்தை வல்வேல் காக்க
- பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
- கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
- ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
- கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
- முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
- பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
- நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
- நாபிக் கமலம் நல்வேல் காக்க
- முப்பால் நாடியை முனைவேல் காக்க
- எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
- அடியேன் வசனம் அசைவுள நேரம்
- கடுகவே வந்து கனகவேல் காக்க
- வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
- அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
- ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
- தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
- காக்க காக்க கனகவேல் காக்க
- நோக்க நோக்க நொடியில் நோக்க
- தாக்க தாக்க தடையறத் தாக்க
- பார்க்க பார்க்க பாவம் பொடிபட
- பில்லி சூனியம் பெரும்பகை அகல
- வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள்
- அல்லற்படுத்தும் அடங்காமுனியும்
- பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்
- கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
- பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும்
- அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
- இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
- எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
- கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
- விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
- தண்டியக்காரரும் சண்டா ளர்களும்
- என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
- ஆனை அடியினில் அரும்பா வைகளும்
- பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
- நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
- பாவைக ளுடனே பலகலசத்துடன்
- மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
- ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
- காசும் பணமும் காவுடன் சோறும்
- ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
- அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
- மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
- காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
- அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
- வாய்விட் டலறி மதிகெட் டோட
- படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
- கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
- கட்டி உருட்டு கால்கை முறியக்
- கட்டு கட்டு கதறிடக் கட்டு
- முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
- செக்குசெக்கு செதில் செதிலாக
- சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
- குத்து குத்து கூர்வடி வேலால்
- பற்றுபற்று பகலவன் தணலெரி
- தணலெரி தணலெரி தணலதுவாக
- விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
- புலியும் நரியும் புன்னரி நாயும்
- எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்
- தேளும் பாம்பும் செய்யான் பூரான்
- கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
- ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
- ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
- வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
- சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு
- குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
- பக்கப் பிளவை படர்தொடை வாழை
- கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
- பற்குத்து அரணை பருஅரை ஆப்பும்
- எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால்
- நில்லாதோட நீயெனக் கருள்வாய்
- ஈரேழ் உலகமும் எனக்குற வாக
- ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
- மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும்
- உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
- சரஹணபவனே சைலொளி பவனே
- திரிபுர பவனே திகழொளி பவனே
- பரிபுர பவனே பவமொளி பவனே
- அரிதிரு மருகா அமாராபதியைக்
- காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
- கந்தா குகனே கதிர் வேலவனே
- கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
- இடும்பனை அழித்த இனியவேல் முருகா
- தணிகா சலனே சங்கரன் புதல்வா
- கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
- பழநிப் பதிவாழ் பால குமாரா
- ஆவினன்குடிவாழ் அழகிய வேலா
- செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
- சமராபுரிவாழ் சண்முகத் தரசே
- காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
- என் நாஇருக்க யானுனைப் பாட
- எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
- பாடினேன் ஆடினேன் பரவசமாக
- ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
- நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
- பாசவினைகள் பற்றது நீங்கி
- உன்பதம் பெறவே உன்னருளாக
- அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
- மெத்தமெத்தாக வேலா யுதனார்
- சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
- வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க
- வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க
- வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க
- வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன்
- வாழ்கவாழ்க வாரணத் துவஜம்
- வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க
- எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள்
- எத்தனை யடியேன் எத்தனை செயினும்
- பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
- பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
- பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து
- மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி
- தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்
- கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய
- பாலன் தேவராயன் பகர்ந்ததை
- காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
- ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
- நேசமுடனொரு நினைவதுமாகிக்
- கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்
- சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
- ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு
- ஓதியே செபித்து உகந்துநீ றணிய
- அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
- திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
- மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
- நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
- நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
- எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
- கந்தர் கைவேலாம் கவசத் தடியை
- வழியாய்க்காண மெய்யாய் விளங்கும்
- விழியாற்காண வெருண்டிடும் பேய்கள்
- பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும்
- நல்லோர் நினைவில் நடனம் புரியும்
- சர்வ சத்துரு சங்கா ரத்தடி
- அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில்
- வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
- சூரபத்மாவைத் துணித்தகை அதனால்
- இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
- குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்
- சின்னக் குழந்தை சேவடி போற்றி
- எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
- மேவிய வடிவுறும் வேலவா போற்றி
- தேவர்கள் சேனா பதியே போற்றி
- குறமகள் மனமகிழ்கோவே போற்றி
- திறமிகு திவ்விய தேகா போற்றி
- இடும்பா யுதனே இடும்பா போற்றி
- கடம்பா போற்றி கந்தா போற்றி
- வெட்சி புனையும் வேளே போற்றி
- உயர்கிரி கனகசபைக்கோ ரரசே
- மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
- சரணம் சரணம் சரஹண பவஓம்
- சரணம் சரணம் சண்முகா சரணம் !
What it means (பொருள்)
A short summary in Tamil and in plain English, in 10 parts that each cover a group of lines (the line numbers are shown), written for this page. Important: the meanings on this site were written with AI assistance and may contain errors. They are a study aid, not a translation by a scholar. Please check them with a teacher, a learned reader or a printed commentary before relying on them, and use the contact page to report a mistake.
இப்பக்கத்துக்காக எழுதப்பட்ட, தமிழிலும் எளிய ஆங்கிலத்திலும் அமைந்த சுருக்கமான பொருள்: 10 பகுதிகளாக, ஒவ்வொன்றும் சில வரிகளை உள்ளடக்கியது (வரி எண்கள் காட்டப்பட்டுள்ளன). முக்கியம்: இத்தளத்தில் உள்ள பொருள் விளக்கங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் எழுதப்பட்டவை; அவற்றில் பிழைகள் இருக்கலாம். அவை கற்க உதவும் குறிப்புகள் மட்டுமே, அறிஞர் ஒருவரின் மொழிபெயர்ப்பு அல்ல. அவற்றை நம்புவதற்கு முன் ஆசிரியர், கற்றறிந்தவர் அல்லது அச்சிட்ட உரை நூலுடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள்; பிழை கண்டால் தொடர்புப் பக்கத்தின் வழியே தெரிவியுங்கள்.
தமிழில்
வரிகள் 1–6: தொடக்கத்தில் ஓதும் இரண்டு வெண்பாக்கள். தேவர்களின் துயர் தீரப் போர் செய்த குமரனின் திருவடியை நெஞ்சே நினை என்று முதல் பாடல் கூறுகிறது. இந்தக் கந்தர் சஷ்டி கவசத்தைப் போற்றுவோரின் வலிமையான வினைகளும் துன்பமும் நீங்கும் என்றும், மனத்தில் பதிப்போருக்குச் செல்வம் பெருகி, தியானம் கைகூடி, கந்தனின் அருள் கிடைக்கும் என்றும் அடுத்த பாடல் கூறுகிறது. வரிகள் 7–27: சஷ்டியை நோக்கும் சரவணபவனாரை அழைக்கும் பகுதி. அடியார்க்கு உதவும் வேலனே, பன்மணிச் சதங்கை ஒலிக்க மயிலில் நடனமாடி வருபவனே, வேலால் என்னைக் காக்க வா என்று வேண்டுகிறது. இந்திரன் முதலிய எண்திசைத் தேவர்களும் போற்றும் வடிவேலனே, வாசவனின் மருமகனே, குறமகள் வள்ளியின் நினைவில் இருப்பவனே, ஆறுமுகம் படைத்தவனே வருக என்று பலமுறை அழைக்கிறது. இடையிலுள்ள ஒலிக்குறிப்புகள் மந்திர எழுத்துகளின் ஒலி. வரிகள் 28–38: அசுரர் குலத்தை அழித்தவனே, பன்னிரண்டு கரங்களிலும் பாசம், அங்குசம் முதலியவற்றை ஏந்தி, பன்னிரண்டு விழிகளால் விரைந்து என்னைக் காக்க வருக என்று வேண்டுகிறது. தொடரும் வரிகள் மந்திர எழுத்துகளின் ஒலிகள்; ஆறுமுகன் ஒப்பற்ற ஒளியாக என் முன் என்றும் ஒளிர்ந்து வருக என்கிறது. வரிகள் 39–68: முருகனின் தோற்றத்தை வருணிக்கும் பகுதி: ஆறு முகங்கள், ஆறு முடிகள், திருநீறு பூசிய நெற்றி, நீண்ட புருவம், பன்னிரண்டு கண்கள், பவளம் போன்ற வாய், பன்னிரண்டு செவிகளில் குண்டலங்கள், பன்னிரண்டு தோள்கள், அணிகலன்கள், முத்துமாலை, முப்புரி நூல், இடையில் பட்டு, சீரா, திருவடியில் சிலம்பொலி. இடையில் ஆடலின் ஒலிக்குறிப்புகள் வருகின்றன. இறுதியில் ஏரகச் செல்வனே, உன் திருவடியே உறுதி என்று எண்ணும் என் தலையில் அவை காக்கட்டும் என்கிறது. வரிகள் 69–98: உடலின் உறுப்புகளைக் காக்கும்படி வேலிடம் வேண்டும் பகுதி: முகம், நெற்றி, இரு கண்கள், செவிகள், மூக்கு, வாய், பற்கள், நாக்கு, கன்னங்கள், கழுத்து, மார்பு, தோள்கள், முதுகு, வயிறு, இடை, கீழ் உறுப்புகள், தொடைகள், முழங்கால், கால் விரல்கள், கைகள் ஆகியவற்றை ஒவ்வொரு வேலும் காக்க என்று பாடுகிறது. வரிகள் 99–112: நாவில் கலைமகள் துணையாக இருக்கவும், நாபிக் கமலத்தை வேல் காக்கவும் வேண்டுகிறது. பகலிலும் இரவிலும், நடு இரவிலும், எப்போதும் என்னைக் காக்க என்றும், 'காக்க காக்க, நோக்க நோக்க, தாக்க தாக்க' என்று வேலிடம் தீமை நீங்க வேண்டியும் பாடுகிறது. வரிகள் 113–149: தீங்கு செய்ய நினைக்கும் தீய சக்திகள், பேய்கள், பில்லி சூனியம், பகை ஆகியவை தன்னைக் கண்டதும் அஞ்சி ஓட வேண்டும் என்றும், வேல் அவற்றைக் கட்டி, தாக்கி அழிக்க வேண்டும் என்றும் கடுமையான சொற்களில் வேண்டும் பகுதி. இது கவிதையின் பாரம்பரிய சொல்லாட்சி; பொருள் தீமையிலிருந்து பாதுகாப்பு வேண்டுவதே. வரிகள் 150–163: புலி, நரி, நாய், கரடி போன்ற விலங்குகளும், தேள், பாம்பு போன்ற நச்சு உயிர்களும் நெருங்காமல் இருக்க வேண்டுகிறது. பல நோய்கள் வலிகளின் பெயர்களைச் சொல்லி, இவை எல்லாம் என்னைக் கண்டவுடன் நில்லாமல் ஓடிவிட அருள்வாய் என்று வேண்டுகிறது. வரிகள் 164–198: பதினான்கு உலகும், எல்லா மனிதரும், அரசர்களும் எனக்கு நண்பராக வேண்டும் என்று வேண்டுகிறது. பின்னர் முருகனின் பல பெயர்களையும் இடங்களையும் துதிக்கிறது: சரவணபவன், கந்தன், குகன், கார்த்திகை மைந்தன், கடம்பன், தணிகாசலன், கதிர்காமம், பழநி, திருவாவினன்குடி, திருச்செந்தூர், சமராபுரி. தன் நாவில் கலைமகள் இருக்கப் பாடினேன், ஆடினேன் என்றும், திருநீறு அணிந்து வாழ்க வாழ்க என்றும் வாழ்த்துகிறது. வரிகள் 199–244: 'எத்தனை குறைகள், எத்தனை பிழைகள் செய்தாலும் பொறுப்பது உன் கடமை' என்று மன்னிப்பு வேண்டி, தேவராயன் பாடிய இந்தக் கந்தர் சஷ்டி கவசத்தைக் காலையிலும் மாலையிலும் தூய்மையுடன் தியானிப்போருக்குக் கிடைக்கும் பயன்களைக் கூறுகிறது: துன்பம் நீங்குதல், பகைவர் பணிதல், நவகோள் நன்மை தருதல், பேய்கள் அஞ்சுதல், நீண்ட நலவாழ்வு. இறுதியில் வேலவனைப் 'போற்றி' என்று துதித்து, 'சரணம் சரணம் சண்முகா சரணம்' என்று முடிகிறது.
In English
Lines 1–6: Two opening venba verses. The first tells the mind to think of the feet of Kumaran, who fought to end the gods' suffering. The second says that for those who praise this Kanda Sashti Kavasam, heavy karma and sorrow go; for those who keep it in the heart, wealth grows, meditation succeeds and the grace of Skanda comes. Lines 7–27: A call to Saravanabhava, who looks on Sashti and helps the good. It asks the lord with the bright spear, who dances on his peacock to the sound of jewelled anklets, to come and protect the speaker with his vel. It then calls him again and again: the vel the eight directions' gods praise, nephew of Vasava (Indra), the one remembered by the hunter-girl Valli, the creator of six faces. The strings of syllables in between are sounds of mantra letters. Lines 28–38: Come, destroyer of the demons' clan, with the noose and goad in your twelve hands and your twelve wide eyes, quickly to protect me. The lines of syllables that follow are mantra sounds, and the six-faced lord is asked to shine before me every day as the one light. Lines 39–68: A description of Murugan's form: six faces and six crowns, a forehead marked with sacred ash, long brows, twelve eyes, a coral mouth, earrings in twelve ears, twelve shoulders, jewels, pearl strings, the sacred thread, a silk waist-cloth, a sword, and the sound of anklets on his feet. Dance syllables fill the middle. It ends by asking that his feet protect the one who holds them as his sure refuge, Lord of Erakam. Lines 69–98: A prayer asking the vel to guard each part of the body: the face, forehead, both eyes, ears, nose, mouth, teeth, tongue, cheeks, neck, chest, shoulders, back, stomach, waist, the lower body, thighs, knees, toes and hands. Each line names a different vel (the bright, holy, victorious, kind vel) for each part. Lines 99–112: It asks that Saraswati stand by the tongue, and that the vel guard the navel lotus. It asks for protection by day, at dusk, at midnight and at all times, and repeats 'protect, protect; look, look; strike, strike' to the vel, asking for harm to be driven away. Lines 113–149: In strong traditional language, the poet asks the vel to drive away anything that wishes the speaker harm: black magic, spirits and ghosts, enemies. These verses are a protection prayer; the images are fierce but the meaning is protection from evil. Lines 150–163: It asks that wild animals such as tigers, foxes, dogs and bears, and scorpions and snakes, keep away. It then names many illnesses and pains, and asks that all of them leave when they see the speaker. Lines 164–198: It asks that the fourteen worlds, all people and all rulers be friendly. It then praises Murugan by many names and places: Saravanabhava, Kanda, Guha, son of the Krittikas, Kadamba, Thanikachalam, Kathirgamam, Palani, Thiruvavinankudi, Thiruchendur and Samarapuri. The speaker says that, with Saraswati on his tongue, he sang and danced, wears the sacred ash, and wishes Murugan, his vel and his peacock a long life. Lines 199–244: The poet asks forgiveness: however many faults the speaker has, a father forgives. It says Devarayan sang this Kanda Sashti Kavasam, and lists the fruits for those who recite it morning and evening with a calm mind: sorrow goes, enemies bow, the nine planets are kind, spirits are afraid and life is long and well. It ends with salutations to the lord of the vel, 'Saranam, Saranam, Shanmukha Saranam'.
About this textஇந்நூலைப் பற்றி
Kanda Sashti Kavasam is a Tamil prayer to Lord Murugan for protection, composed by Devaraya Swamigal and recited by many families, especially during the Skanda Sashti festival. It is one of the best-known Tamil devotional poems. Each line asks the vel (the spear of Murugan) to guard the one who prays.
This page has the two opening venba verses and the whole kavasam, 244 lines in all, in Tamil script. The meaning is given in 10 parts, each covering a group of lines (the line numbers are shown). The poem has lines of syllables that are mantra sounds, and some strong wording about evil forces, which is traditional; the meaning of those parts is protection from harm.
How to use this page: press Follow along and read the verse aloud as each word lights up. The highlight is only a guide to the pace and makes no sound, and you can tap any word to start from it. Then press Listen under the meaning to hear it in Tamil or in English. Use A+ to make the verse larger for reciting together, or print the page.
கந்த சஷ்டி கவசம், பாதுகாப்பு வேண்டி முருகப் பெருமானிடம் செய்யும் தமிழ் வழிபாட்டுப் பாடல்; இதை இயற்றியவர் தேவராய சுவாமிகள். பல குடும்பங்கள், சிறப்பாகக் கந்த சஷ்டி விழாவின்போது, இதை ஓதுகிறார்கள். மிகவும் அறியப்பட்ட தமிழ் பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வரியும், வேண்டுபவரைக் காக்குமாறு வேலை (முருகனின் வேல்) வேண்டுகிறது.
இந்தப் பக்கத்தில் தொடக்கத்தில் உள்ள இரண்டு வெண்பாக்களும் முழுக் கவசமும், மொத்தம் 244 வரிகள், தமிழ் எழுத்தில் உள்ளன. பொருள் 10 பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது; ஒவ்வொன்றும் ஒரு வரிக் குழுவை விளக்குகிறது (வரி எண்கள் காட்டப்பட்டுள்ளன). இந்தப் பாடலில் மந்திர ஒலிகளான அசைகளால் ஆன வரிகளும், தீய சக்திகளைப் பற்றிய சில கடுமையான சொற்களும் உள்ளன; அவை மரபு வழி வந்தவை. அந்தப் பகுதிகளின் பொருள், தீங்கிலிருந்து பாதுகாப்பு என்பதே.
இப்பக்கத்தைப் பயன்படுத்தும் முறை: உடன் படியுங்கள் என்பதை அழுத்தி, ஒவ்வொரு சொல்லும் ஒளிரும்போது பாடலை உரக்கப் படியுங்கள். ஒளிர்வு வேகத்துக்கான வழிகாட்டி மட்டுமே; அது ஒலி எழுப்பாது. எந்தச் சொல்லைத் தொட்டாலும் அங்கிருந்து தொடங்கலாம். பிறகு பொருளின் கீழ் உள்ள கேளுங்கள் என்பதை அழுத்தி, பொருளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ கேட்கலாம். சேர்ந்து பாடும்போது பாடலைப் பெரிதாக்க A+ பொத்தானைப் பயன்படுத்துங்கள், அல்லது பக்கத்தை அச்சிடுங்கள்.
வாசிப்பு வழிகாட்டி சொற்களை நிலையான வேகத்தில் ஒளிரச் செய்கிறது; நீங்கள் ஒலியை இயக்கினால் மட்டுமே ஒலிக்கும். பொருளை உங்கள் சாதனத்தில் ஏற்கெனவே உள்ள கணினிக் குரல் வாசிக்கிறது; எனவே அது ஒலிக்கும் விதம் நிறுவப்பட்ட குரல்களைப் பொறுத்தது. பாடல்களின் சொல்லமைப்பு அச்சுப் பதிப்புகளுக்கு இடையே சற்று மாறுபடலாம். பிழை கண்டால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
The reading guide highlights words at a steady pace and is silent unless you turn the sound on. The meaning is read by a computer voice already on your device, so how it sounds depends on the voices installed. The wording of verses can differ slightly between printed editions. If you spot a mistake, please tell us.